Fishing ban! Fish prices likely to rise

கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15- ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் (14/04/2021) தொடங்கியது.மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதையொட்டி ஆழ்கடலில் இருந்த அனைத்து விசைப்படகுகளும் பைபர் படகுகளும் கரை திரும்பின.

Advertisment

புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்குவள்ளியூர் வரையிலும், ஏனாம் கடல் பகுதிகளிலும் பாரம்பரிய மீன்பிடி படகுகள், கட்டுமரம், நாட்டுப் படகுகளைத் தவிர அனைத்து வகை படகுகளும், குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Fishing ban! Fish prices likely to rise

இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேவனாம்பட்டினம் துறைமுகம், தாழங்குடா, சித்திரைபேட்டை, ராஜாபேட்டை, எம்.ஜி.ஆர் திட்டு, முடசல் ஓடை, கிள்ளை, நல்லவாடி, அண்ணங்கோவில் உட்பட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மீன்பிடித் தொழிலை நம்பி சுமார் 1 லட்சம் மீனவர்கள் உள்ளனர். 2,000 பைபர் படகுகள், 1,500 கட்டுமரப் படகுகள், 500 விசைப்படகுகள் போன்றவற்றில் மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடையைத் தொடர்ந்து இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள 4 ஆயிரம் மீன்பிடிப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் நேற்றுமுன்தினம் இரவு முதல் புதுயேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்குச்செல்லாததால் ஓய்வில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப் படகுகளையும், வலைகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Fishing ban! Fish prices likely to rise

மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் கடலூரில் அடுத்தடுத்த நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி கருவாடு மற்றும் ஏரி மீன்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல் காரைக்காலிலும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. அங்கு மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார்10,000- க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாஹே பிராந்தியத்திலும் ஜூன் 1- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை 61 நாட்கள் இழுவலைகளைக் கொண்டு விசைப்படகில் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட உள்ளது.

இதனிடையேமீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததால் அதற்கு உரிய நிவாரணத்தை உரிய காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள், மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு நிவாரணத்தை உயர்த்தி வழங்கவும் புதுச்சேரி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.