Skip to main content

மீன் வளர்ச்சி கழக டீசல் பங்குக்கு பூட்டு! நாகை மீனவர்கள் தவிப்பு !

Published on 04/07/2018 | Edited on 05/07/2018
dieseal

 

நாகையில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டதால் 3 வது நாளாக 450 விசைப்படகுகள் டீசல் நிரப்ப முடியாமல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், ஒரே நாளில்  43 லட்சம் ரூபாய் மானியத்தொகை மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

மீன் பிடி தடைகாலம் முடிந்து கடந்த 14 ம் தேதி நாகை மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கடல் நீரின் வெள்ளம்பார்த்து இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 340 விசைப்படகுகள் தடை காலம் முடியும் முன்னர் மீன்பிடிக்க சென்றதாக கூறி நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூரை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு, மீன்வளத்துறை அபராதம் விதித்து திடீர் என நோட்டீஸ் அனுப்பியது. 

 

மேலும் 340 விசைப்படகுகளுக்கும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலையும் வழங்காமல் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் 340 விசைப்படகுகளுக்கு தேவையான மானிய டீசல் கிடைக்காததால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் நாகை மீனவர்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

இந்த விவகாரத்தில் ஆவேசமடைந்த நாகை மீனவர்கள் இரு தினங்களுக்கு முன் கீச்சாங்குப்பம் துறைமுகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையத்தை இழுத்து மூடி பூட்டு போட்டனர். இதனால் அங்கு வழங்கம் போல் டீசல் இறக்க வந்த டேங்கர் லாரிகள் எண்ணெய்யை இறக்க முடியாமல் திரும்பி சென்றதுடன் மற்ற விசைப்படகுகளுக்கு தேவையான டீசலை நிரப்ப முடியாத நிலையும் ஏற்பட்டது. 

 

இதனிடையே டீசல் விற்பனை நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டதால் 2 வது நாளாக 450 விசைப்படகுகளுக்கு டீசல் நிரப்ப முடியாமல் மீனவர்கள் அங்கு தவித்து வருகின்றனர். மேலும் 340  விசைப்படகுகளுக்கு 30 ம் தேதி வழங்க வேண்டிய டீசல் வழங்காததால் ஒரே நாளில்  43 லட்சம் ரூபாய் மானியத்தொகை மீனவர்களுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது. 

 

அரசுக்கும், மீனவர்களுக்கும் உள்ள உறவை மீன்வளத் துறை அதிகாரிகள் துண்டிக்க நினைப்பதாக குற்றம் சாட்டும் நாகை மீனவர்கள், மானிய டீசல் விவகாரத்தில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை வழங்குவதுடன், இப்பிரச்சனைக்கு தமிழக அரசு சுமூக தீர்வு எட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Chief Minister M.K.Stalin says Modi, who is in the position of Prime Minister, is gloating

ஐந்தாவது முறையாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று (15-03-24) கன்னியாகுமரி பகுதி வந்திருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, “விஷ்வகுருவா மவுனகுருவா? இலங்கை கடற்பகுதியில் யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உயிரோடு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி விளையாடுகிறது. இலங்கையில், நமது மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். காங்கிரஸ் - திமுக செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிப்பார்கள். இந்த பாவச் செயலுக்கான கணக்கை அவர்களிடம் கேட்கும் நேரம் வந்துவிட்டது” என்று பேசினார். 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால் தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா?

கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்?

படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? இரண்டாவது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை. தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பதில் சொல்லுங்க பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்க தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

“மீனவர் சிக்கலுக்கு உடனடியாகத் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் தேவை” - அன்புமணி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Anbumani condemned the arrest of 15 more Tamil Nadu fishermen

தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள்  வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக  மீன் பிடிக்க  உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் முடிவே இல்லாமல்  தொடர்ந்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனால், அந்தப்  பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்வாகவே மேலும் 15  மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக் கொள்ள  முடியாது.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வது கடந்த 40 ஆண்டுகளுக்கும்  மேலாக தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை  பறிப்பது தான் இலங்கை அரசின் நோக்கமாக உள்ளது. இந்த உண்மையை தெரிந்திருந்தும் அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல்  இருப்பது நியாயமல்ல.

இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று  பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது. மீனவர்கள் கைது  தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் அதையே  அறிவுரையாக வழங்கியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.