Skip to main content

தமிழகத்தில் முதல் முறையாக இராணுவ கண்காட்சி! 

Published on 11/04/2018 | Edited on 11/04/2018



சென்னையை அடுத்த திருப்போரூர் வட்டத்தில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் பத்தாவது இராணுவ கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இந்த விழா இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. அறிமுக நாளான இன்று முப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது . அறிமுக விழாவை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சியில் நாற்பத்தி ஏழு நாடுகளைச் சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள்  650 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 75 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றனர். இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த இராணுவக் கண்காட்சி முதல் முறையாக தமிழகத்தில் நடைபெறுகின்றது.

பிரதமர் மோடி கொண்டுவந்த 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், இராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தனியார் வசம் செல்ல இருப்பதை முன்னிட்டு இந்திய நிறுவனங்கள் ஆயுதங்களை தயாரிப்பதை ஊக்குவிக்கவும், இந்த கண்காட்சியானது நடைபெறுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் விழாவில் 12ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்கிறார், 13ஆம் தேதி நிறுவனங்கள் தங்களின் ஆயுதங்கள் குறித்து விளக்கமளிக்கின்றனர், 14ஆம் தேதி பொதுமக்களை கண்காட்சி பார்க்க அனுமதிக்கின்றனர். உள்ளே சென்று பார்க்க ஆதார் அவசியம் என்றும் கூறியுள்ளனர். இங்கு மொத்தம் ஆயுதங்களை காட்சிப்படுத்த ஏழு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது, "தற்போதய இராணுவ கண்காட்சி மூலம் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா இருக்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏவுகணைகளுக்கு வெளிநாட்டில் வரவேற்பு  உள்ளது. உள்நாட்டில் இனி இராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படும். அதற்கான வலிமை இந்தியாவிடம் உள்ளது. இராணுவ தளவாடத்தில் முதலீடு செய்யும் நிறுனவங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. நாளை பிரதமர் மோடி முறையாகத் தொடங்கி வைக்கிறார். அவர் வருவதில் எந்த ஒரு மாற்றமுமில்லை" என்றார்.

சார்ந்த செய்திகள்