Fireworks plant accident! one passed away

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், க. மாமனந்தல் கிராமத்தின் அருகே கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஷேக் தாவுத் மகன்கள் சபியுல்லா, இஸ்மாயில் ஆகிய இருவருக்கும் சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இங்கிருந்து திருவிழா காலங்களில் நாட்டு வெடிகள் மற்றும் வானவேடிக்கைக்கான வெடிகள் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த குடோனில் பண்ருட்டியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குடோனில் இருந்தபடி வெடிபொருட்களைத்தயாரித்துக் கொடுத்துள்ளார். இவருடன் அவரது மனைவி பத்மினி மற்றும் அவரின் தங்கை ஆகிய 2 பேரும் வெடிமருந்து தயாரிக்கும் பணியை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை பட்டாசு குடோனுக்கு சென்ற ஏழுமலை மட்டும் வந்து கதவை திறந்து உள்ளே சென்று வெடிபொருட்களை பிரித்து அதில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் எழுமலையன் உடல் சுமார் 30 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சிதறிய நிலையில் கிடந்தது. குடோன் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக இடிந்து நொறுங்கி போனது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த வெடி வெடித்த சத்தம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி கிராம மக்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. (பொறுப்பு) சுரேஷ், கோட்டாட்சியர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் நாட்டு வெடிகள் அதிக அளவு தயாரித்து பதுக்கி அந்தக் குடோனில் வைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டு அதில் உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 மாதத்திற்கு முன்பு தீபாவளி சமயத்தில் சங்கராபுரம் பட்டாசு கடையில் பெரும் விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு பட்டாசு கடைகள் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இடிந்து தரைமட்டமாகிய பட்டாசு கடைக்கு கடந்த 2019 மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் அதன்பிறகு புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இச்சம்பவம் அறிந்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் புவனேஸ்வரி பெருமாள், நகராட்சி சேர்மன் சுப்புராயலு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இந்த விபத்தில் இறந்த ஏழுமலையின் மனைவி பத்மினி அளித்த புகாரின் பேரில், சபியுல்லா, இஸ்மாயில் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வெடி விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.