Fireworks godown incident Chief Minister Relief Notice

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தப் பட்டாசு குடோனில் இன்று காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா? எனத் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். முதலில் வெடி விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளதாகத்தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகில் இருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர்பலியாகி உள்ளனர். மேலும், இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தவர்களுக்குமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

பட்டாசு குடோன் அருகில் உள்ள உணவகத்தில் உள்ள சிலிண்டர் வெடித்துப் பரவிய தீ விபத்தினால் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியை அனுப்பிவைத்துள்ளேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத்தெரிவித்துள்ளார்.