Fireworks Factory incident Obituary of CM MK stalin

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தனியாருக்குச் சொந்தமான ராமதாஸ் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடி தயாரிக்கும்போது தீப்பிடித்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் பொறையார் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சுமார் 100 மீட்டர் தூரத்திற்குச் சிதறி விழுந்துள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வெடி விபத்து தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மோகனை பொறையார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் வெடி விபத்து தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணவெடி தயாரிக்கும் இடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Fireworks Factory incident Obituary of CM MK stalin

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும்அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத்தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.