Advertisment

“பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்” - ஓ. பன்னீர்செல்வம்

Firecracker factory incidents should be stopped says O panneerselvam

Advertisment

பட்டாசு ஆலை விபத்துகளைத்தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே பட்டாசு உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது என்பதும், தீபாவளிப் பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளுக்காகத்தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதும், இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் உள்ளன என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலையில் வெடி விபத்து.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் உள்ள சோலை பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் வெடி விபத்து. சிவகாசி அருகே ஜோதி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியிலுள்ள பட்டாசு கிடங்கில் வெடி விபத்து. காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து என எண்ணிலடங்கா விபத்துகள் பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

Advertisment

பட்டாசு விபத்துகளைத்தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் எடுக்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தி நான் அறிக்கை விடுத்துள்ளேன். இருப்பினும், எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. மாறாக, பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகள் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கும் செயலாகும்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தில் ராமதாஸ் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித உடல்கள் தூக்கி வீசப்பட்டதாகவும், இந்த விபத்தில் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த மதன் மற்றும் ராகவன் மற்றும் சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிகேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நான்கு பேர் உடல் கருகிய நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமுற்றோர் விரைந்து பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மருந்துக் கலவைகளைப் பயன்படுத்துவது குறித்தும், மீதமுள்ள மருந்துக் கலவைகளை அகற்றுவது குறித்தும், கழிவுப் பட்டாசுகளை அகற்றுவது குறித்தும், பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் எடுத்துக்கூறி அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி வருங்காலங்களில் பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதைத்தடுத்து நிறுத்த வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.” எனத்தெரிவித்துள்ளார்.

crackers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe