Skip to main content

பழுதாகி நின்ற தீயணைப்பு வாகனம்... போய் சேருவதற்குள் எரிந்து முடிந்தது ஏழை குடிசை

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ரஹும். பழைய வாணியம்பாடியில் பாலாற்றங்கரை அருகே குடிசை வீடு கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறார். 

 

இந்நிலையில் மே 12ந் தேதி (இன்று) மதியம், அவரது குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட்டு கத்த வீட்டுக்குள் இருந்த ரஹீம் குடும்பத்தார் வெளியே ஓடிவந்துள்ளனர். வாலியில் தண்ணீர் கொண்டு வந்து தீ மீது ஊற்றியும் தீ அணையவில்லை. இதனால் வாணியம்பாடியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி இளைஞர்கள் தகவல் கூறினர்.

 

fire truck repair... The poor cottage burned...

 

தீயணைப்பு வண்டி புறப்பட்டு மின்னல் வேகத்தில் வந்தது. வரும்போது, வழியில் திடீரென நின்றது. வண்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியான தீயணைப்பு துறையினர், அங்குயிருந்த பொதுமக்களிடம் உதவி கேட்க அவர்கள் தீயணைப்பு தண்ணீர் லாரியை பின்னால் நின்று தள்ளியுள்ளனர். அப்போதும் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் பழுதாகி நின்றது. 

 

தீயணைப்பு வண்டி பழுதாகி பாதி வழியில் நின்றதால், தீயை அணைக்க முடியாமல் போனது. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்துப்போயின. அந்த குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

அந்த குடிசை எரிந்து முடிந்தபின் தீயணைப்பு துறையின் தண்ணீர் லாரி வந்து நின்றுள்ளது. அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப, நாங்க என்ன செய்யறது, அரசாங்கம் தர்ற வண்டியை தான் பயன்படுத்தறோம், வண்டி அடிக்கடி பழுதாகி நிற்குதுன்னு சொல்லியாச்சி, மேலதிகாரிகள் சரி செய்ய ஒப்புதல் தராததால் பழுதான வண்டியை வச்சிக்கிட்டு ஓட்டறோம், நாங்க என்ன செய்ய முடியும் என்றுள்ளனர்.

 

வாணியம்பாடி நகரில் தான் தமிழகத்தை ஆளும் அதிமுகவை சேர்ந்தவரும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர்கபில் உள்ளார். வாணியம்பாடி என்பது அவரது தொகுதி தான். அமைச்சரின் தொகுதியில், அவரின் ஊரில் உள்ள தீயணைப்பு வாகனம்மே இந்த லட்சணத்தில் இருந்தால் மற்ற ஊர்களில் என்ன மாதிரியிருக்கும் என நினைத்து பாருங்கள் என வேதனைப்படுகின்றனர் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்