Skip to main content

தனியார் கல்லூரியில் தீவிபத்து; மாணவர்கள் ஆசிரியர்கள் மைதானத்தில் தஞ்சம் 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Fire in private college; Students and teachers are sheltered in the grounds

 

கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்து வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரி கட்டிடங்களுக்குள் இருந்து வெளியேறிய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பிற்காக தஞ்சமடைந்துள்ளனர். உள்ளே யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பது தொடர்பாக தீயணைப்புத்துறை வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நான் எங்கேயும் இப்படிப் பார்த்ததில்லை' - பானிபூரி வேட்டையில் அதிகாரி ஷாக்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 'I have never seen anything like this anywhere'- Officer Shock on panipuri hunt

அண்மையில் பஞ்சுமிட்டாயில் இடம்பெற்றுள்ள செயற்கை நிறமி புற்றுநோயை உருவாக்கும் கூறுகளைக் கொண்டது எனக் கண்டறியப்பட்ட நிலையில் அவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செயற்கை நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்திலும் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் சோதனையைத் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செட்டி வீதி பகுதியில் உள்ள 'ஸ்ரீபகவதி அம்மன் பானி பூரி' கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தமாகவும் சில்லறையாகவும் பானிபூரி விற்பனை செய்யும் கடையில் நடந்த ஆய்வில் அதிகாரிகளுக்கு பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தது.

 'I have never seen anything like this anywhere'- Officer Shock on panipuri hunt

கடையின் உள்ளே ஒரு பகுதியின் மூலையில் பானி பூரி கீழே தரைதளத்தில் கொட்டி வைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் கிடந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 'ஏங்க இப்படியா பானிபூரிய கீழ கொட்டி வைப்பீங்க? உங்களுக்கே நல்லா இருக்கா இதெல்லாம். சாப்பிடற பொருள் இப்படி கீழ தரையில் கொட்டி வச்சிருக்கீங்க. இதை அப்படியே எடுத்து கவரில் போட்டு கொடுத்து விட வேண்டியதுதானா? அட்லீஸ்ட் ஒரு ட்ரம் அல்லது பாலிதீன் கவருக்குள் போட்டு வைக்க வேண்டாமா?' என அதிகாரி கேள்விகளை எழுப்பினார். ''உடனே இதெல்லாம் சீஸ் பண்ணுங்க? எங்கேயுமே இப்படி பார்க்கலப்பா இப்படி கீழே கொட்டி வச்சிருக்கீங்க. நான் இதை விட சின்னதா பானி பூரி செய்ற இடத்தில் கூட ஆய்வு செய்யப் போயிருக்கேன். அவர்கள் கூட கீழே போட்டது கிடையாது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய்யை ஆய்வு செய்த அதிகாரி 'ஆயில பார்த்தாவே தெரியுது எத்தனை தடவை இதை யூஸ் பண்ணிருப்பீங்க. நீங்களே பாருங்க இந்த ஆயில் எப்படி இருக்குன்னு. ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் ஆயில பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு ஆயில் பயன்படுத்தி விட்டு பின்னர் அதனை அழித்துவிட வேண்டும் என்று எச்சரித்தார்.

Next Story

“கல்லூரிச் சேர்க்கை; பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி” - ராமதாஸ் கண்டனம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
ramadoss said that Injustice to bc and mbc in college admissions

தமிழ்நாட்டில் கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான முறையில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கும் வகையில் திருத்தம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்திருக்கிறார். திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வுகள் மூலம் 64% இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள 36% இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுகள் அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ளன. சில பாடப்பிரிவுகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு இடம் இல்லாத நிலையும், சில பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் இல்லாத நிலையும் நிலவும் சூழலில், குறைந்த எண்ணிக்கையில் இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஜூலை 2 ஆம் நாள் பிறப்பித்திருக்கும் அரசாணை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘‘கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப  சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். அதேநேரத்தில் பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது’’ என்பது தான் அவர் பிறப்பித்திருக்கும் ஆணையாகும்.

கல்லூரிக் கல்வி இயக்குனர் பிறப்பித்திருக்கும் ஆணை சமூகநீதிக்கு மட்டுமின்றி, விதிமுறைகளுக்கும்  எதிரானது ஆகும். அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும். அதற்காகத் தான் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்த மாதமே நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று முதல் ஜூலை 5&ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அந்த நோக்கத்திற்கிணங்க பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும். இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு  ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும்.

அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்; அவை யாருக்கும் பயன்படாமல் வீணாகி விடும். இது அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும்; அரசு கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்கு எதிரானதாகும். அரசின் கொள்கைக்கும், சமூகநீதிக்கும் எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்பதே என் வினா.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக கடந்த மே 22 ஆம் நாள் அப்போதைய உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திக், அரசாணை (எண்:110) ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் இணைப்பில் இடம்பெற்றுள்ள 33 ஆம் பத்தியில் பழங்குடியினருக்கான இடங்கள் கடைசி வரை அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்களை பட்டியலினத்தவரைக் கொண்டும், அவர்களும் இல்லாவிட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினரைக் கொண்டும் நிரப்பலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால், அவை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அவை பொதுப்போட்டிப் பிரிவினரைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும். முஸ்லீம் வகுப்பினருக்கான இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பலாம் என்றும் உயர்கல்வித்துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இதே நடைமுறை தான் அரசு கலைக் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், அதற்கு மாறாக பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு எந்தப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக்கூடாது என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட வகுப்பு  மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதன் மூலம், அவர்கள் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு தடுக்கப்படும். இது மிகப்பெரிய சமூக அநீதி. உயர்கல்வித்துறையைப் பொறுத்தவரை அதன் செயலாளர் பிறப்பிக்கும் ஆணை தான் இறுதியானது. அதை மீறி, இப்படி ஒரு சமூகநீதிக்கு எதிரான ஆணையை பிறப்பிக்கக் கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதையே புதிய வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சமூக அநீதி இழைப்பதற்காகவே இப்படி ஓர் ஆணையை கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் பிறப்பிக்கச் செய்ததா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

கல்லூரிக் கல்வி இயக்குனரின் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் 8 ஆம் நாள் முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். மே 22 ஆம் நாளிட்ட உயர்கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் திமுக அரசு மயக்கம் கொள்ளாமல், தடுமாறாமல் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.