புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள மாறுபட்ட கிராமம் மெய்வழிச்சாலை. இந்த சாலைக்குள் பாகுபாடு கூடாது, சொகுசு வாழ்க்கை கூடாது என்பதைக் கொள்கையாகவும் கொண்டுள்ள கிராமம். அதனால் அத்தனையும் சீரான ஓலை வீடுகளே உள்ளன. வீட்டில் எளிதில் தீ பற்றும் மின் இணைப்பு, கேஸ் உள்ளிட்ட எந்தப் பொருளும் பயன்படுத்தக் கூடாது. சமையலுக்கு விறகு அடுப்புகளே இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீப்பெட்டிகளைக் கூட பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தப்படுவது வழக்கம்.
சாலைக்குள்ளேயே 120 மீட்டர் தூரத்திற்குத் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடிக்கும் தீயணைப்பு கருவியும் பயிற்சி பெற்ற இளைஞர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். வாரம் ஒரு முறை சோதனைகளும் தொடர்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் எளிய வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டே வாழ்கின்றனர். அதே நேரத்தில் இந்த சாலையைச் சேர்ந்த மக்கள் பலர் சாலைக்கு வெளியிலும் வெளியூர்களிலும் காங்கிரீட் வீடுகளில் கேஸ் அடுப்பு, ஏசி என வாழ்கின்றனர். அதே போல தான் சாலையில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் கூத்தினிப்பட்டி சாயைில் இதே பகுதியைச் சேர்ந்த பலர் கூரை, மாடி வீடுகள் கட்டடி மின்சாரம் உள்பட அனைத்து வசதிகளுடன் வாழ்கின்றனர்.
இந்த வீடுகளின் ஓரத்தில் ஏற்பட்ட திடீர் தீ அடுத்தடுத்த கூரை வீடுகளிலும் மாடி வீடுகளிலும் பரவிய நிலையில் அப்பகுதி இளைஞர்கள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. அப்பகுதி வீடுகளில் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்களை வெளியேற்றினர். இதனால் பெரும் விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 8 வீடுகள் எரிந்து பொருட்களும் நாசமானது.இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்கத்தான் சாலை நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது என்கின்றனர். மேலும் சாலையைச் சேர்ந்தவர்கள் உடனே சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டனர். மேலும் வீடுகள் சேதமான குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளுக்கும் தயாராக உள்ளனர்.