/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hosur-fire-ani1.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக்கடையில் இன்று மாலை 3 மணியளவில் விற்பனைக்காக வாங்கி வந்த பட்டாசுகளை வாகனத்தில் இருந்து இறக்கிய போது தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அருகிலிருந்த மதுபானக் கடை உள்ளிட்ட 3 கடைகளிலும் தீ மளமளவெனப் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் தருமபுரி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு - கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடையில் இன்று (07.10.2023) ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்றமிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-file-sad_8.jpg)
இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல்துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இச்சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர், கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரவும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் அனுப்பி வைத்துள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)