Fire breaks out in girls hostel in madurai

மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், பல இடங்களில் வேலை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இன்று (12-09-24) அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதியில் இருந்த பிரிட்ஜ் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, கடுமையான கரும்புகை ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தி அந்த விடுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மீட்டனர்.

Advertisment

இந்த விடுதியில் ஏற்பட்டுள்ள தீயினால், கரும்புகை உருவானதில் மூச்சுத்திணறலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரையும், அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், பிரிட்ஜ் வெடிக்கும் போது, அதன் அருகில் இருந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரையும் பலத்த காயங்களுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றனர். பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment