
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் டையிங் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரைப்புதூர் பகுதியில் பூபதி என்பவருக்கு சொந்தமாக சாயத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று பிற்பகல் இந்த தொழிற்சாலையில் கழிவுப்பஞ்சுகள் சேகரிக்கப்படும் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. தீயானது தொழிற்சாலையின் மற்றப்பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக அங்கு வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். அதேநேரம் கழிவுபஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பல சிலிண்டர்கள் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தீ விபத்து சம்பவங்களை பார்ப்பதற்கு அந்த பகுதி மக்கள் அங்கு குவிந்த நிலையில் ஒவ்வொரு சிலிண்டராக வெடித்துச் சிதறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து அங்கிருந்த பொதுமக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தீயை அணைப்பதற்கு இடையூறாக அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.