Skip to main content

பட்டாசு பாரம்பரியத்தைக் காப்போம்! -கதறும் கந்தகபூமி!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

பட்டாசு உற்பத்திக்கு பேரியம் நைட்ரேட் எனப்படும் பச்சை உப்பு பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,  கடந்த நவம்பர்  13-ஆம் தேதியிலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டு,  நாளொரு போராட்டமும் பொழுதொரு குமுறலுமாக கதறி அழுகிறது கந்தகபூமி.  

 

FIRE AND CRACK WORKERS PROTEST IN SIVAKASI

 

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி, விருதுநகரில்  பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்கள் பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனாலும், சட்ட ரீதியான தீர்வு கிடைக்காத நிலையில்,  பட்டாசு ஆலைகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால், பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், கெமிக்கல் டீலர்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள், மற்றும் பட்டாசுத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி, தொடர் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தனர். 

 

FIRE AND CRACK WORKERS PROTEST IN SIVAKASI

 

காவல் துறையினரின் அனுமதியுடன், தொடர் போராட்டத்தை சிவகாசியில் இன்று துவக்கிவிட்டனர். பட்டாசுத் தொழில் முடங்கிவிட்டதால்,  சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக,  பட்டாசு ஆலைக்குச் சொந்தமான பேருந்துகளில் ஏறி   சிவகாசி – திருத்தங்கல் சாலையில் உள்ள சோனி மைதானத்தை நோக்கி  பலரும் வந்த வண்ணம் உள்ளனர். 

FIRE AND CRACK WORKERS PROTEST IN SIVAKASI

 

மத்திய சுற்றுச்சூழல்துறை,  பட்டாசுத் தொழிலில் பேரியம் (பச்சை உப்பு) தடையை நீக்க வேண்டும். சரவெடி தயாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு,  பட்டாசுத் தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதி 3(3பி) விலக்கு பெற சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும். 95 நாட்களாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

 

FIRE AND CRACK WORKERS PROTEST IN SIVAKASI

 

‘SAVE FIREWORKS; SAVE TRADITION; SAVE SIVAKASI.’ என சிவகாசியில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  ‘பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்!’ என்பதே போராட்டம் நடத்துபவர்களின் முழக்கமாக இருக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.