Fire accident in manali sipcot

திருவள்ளூர் மாவட்டம், மணலி புது நகர் அருகே விச்சூரில் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த ராபர்ட் என்பவருக்கு சொந்தமான மாத்திரைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் தயாரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை உள்ளது.

Advertisment

இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மூலப்பொருள் ஆந்திராவுக்கு அனுப்பப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை. இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு இந்த தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மணலி புது நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சற்று நேரத்தில் தீப்பிடித்து மள மளவென்று கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு லேசான தலை சுற்றல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டன. தகவல் அறிந்து மாதவரம், திருவொற்றியூர் மணலி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Advertisment

இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட மூலப் பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று தெரிகிறது. மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணலி புதுநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.