
தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக, முழு ஊரடங்கில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட அரசு அனுமதிக்கவில்லை. அதேநேரம் ஆகம விதிகளின்படி கோயில் பூஜைகளை பக்தர்களின்றி மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
இந்நிலையில்,குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில். அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் தினமும் மூன்று நேரம் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். மேலும், மாசி மாதம் நடக்கும் 10 நாட்கள் திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் இட்டு வழிபாடு செய்வது வழக்கம்.
அதே போல் கேரளா மற்றும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வணங்கிச் செல்வது வழக்கம். அதேபோல, திருவிழாவின் 10 ஆவது நாள் நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும் ஒடுக்கு பூஜை என்பது பெரும் பிரசித்தமானது. அந்த நேரத்தில் கலந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிசப்தமாக நின்று அம்மனை தரிசிப்பார்கள். அப்போது கீழே சிறு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும். இந்த கோயிலில் முழுக்க முழுக்க கேரளா முறைப்படி நடக்கும் பூஜையில் ஆண்களைவிட பெண் பக்தர்களே அதிகம் கலந்துகொள்வர்.
இந்த நிலையில், கரோனா ஊரடங்கால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் நடக்கும் மூன்று நேரப் பூஜைகளை கோயில் பூசாரிகள் பின் பக்க வழியாகச் சென்று நடத்தி வந்தனர். பூஜையின் போது சில பக்தர்கள் கோயிலின் வெளியே ரோட்டில் நின்று அம்மனை தரிசித்து செல்வார்கள். அதே போல் இன்றும் (2-ம் தேதி) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு பூசாரிகள் பூஜை செய்த நிலையில், காலை 7 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் பின் பக்கம் திடீரென்று தீ பிடித்து, அது மளமளவென கோயிலின் மேற்கூரை வரை பரவியது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் பூசாரிகளும் நிர்வாகிகளும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் சொல்லியதையடுத்து தக்கலை, குளச்சல் பகுதியிலிருந்து சென்ற தீயணைப்பு வீரர்களோடு பக்தர்களும் தீயை அணைத்தனர். இதில் கோயிலுக்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், கோயில் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.
கோயிலில் தீ பற்றி எரியும் போது அதைப் பார்த்த மண்டைக்காடு ஸ்ரீ தேவி கோயில் பக்தர்கள் சங்கத்தினர் நம்மிடம் பேசுகையில், “கோயிலில், உள்ளே தொங்க விடப்பட்டிருந்த தூக்கு விளக்கில் எண்ணெய் திரியை எரிய விட்டுவிட்டு அதை பூசாரிகள் கவனிக்காமலிருந்ததால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்காததால் பூசாரிகளுக்குக் காணிக்கை வருமானம் குறைந்துள்ளது. இதனால் தீபாராதனை முடிந்ததும் கோயிலுக்கு வெளியே ரோட்டில் நின்று சாமி கும்பிடும் பக்தர்களுக்கு சந்தனம் குங்குமம் கொடுத்து காணிக்கை வாங்குவதற்காக பூசாரிகள் வெளியே வந்து விடுவார்கள். அப்படி தான் இன்றைக்கும் வெளியே வரும்போது தூக்கு விளக்கு திரி, துணியில் பட்டு அந்த தீ கருவறையின் மேற்கூரையில் பரவியது.
இதை ரோட்டில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் பார்த்து சத்தம் போட்டதால் பெரியளவில் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கு காரணமான பூசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பக்தர்கள் கூறியதன் அடிப்படையில், போலீஸார் தங்களின் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். இச்சம்பவம் குமரி கேரளா பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.