
கொரோனா அச்சுறுத்தலால் நாடே முடங்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் அலைமோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.சில வியாபரிகள் உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, பலர் உணவு கிடைக்காமல் தவித்தும் வருகின்றனர்.இந்தச் சூழலில், மனிதர்கள் கொடுக்கும் மிச்சம் மீதியைக் கொண்டு உயிர்வாழும் வாயில்லா ஜீவன்களும் உணவின்றி தவிக்கின்றன.

அந்த உயிர்கள் பசியோடு அலைவது கண்டு வேதனையுற்று...உணவு வழங்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
கோவை பீளமேடு தீயணைப்புதுறை நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள், தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். அதோடு சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கும் உணவு கொடுத்து மகிழ்ந்தனர்.
ஊரடங்கு உத்தரவில் உணவு விஷயத்தில் மனிதர்களை விடவும் பாதிக்கப்பட்டுள்ள உயிரினங்களுக்குத் தீயணைப்புத்துறையினர் உணவுகளை வழங்கி வருவதை கண்டு, ‘வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்.. இங்கே வாழும் உயிர்க்கெல்லாம்...’ என்பது மெய்ப்பிக்கப் பட்டுள்ளது என நெகிழ்வு கொள்கிறார்கள் கோவை மக்கள்.