/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gnanasekar--anna-university-art_7.jpg)
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரை பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆர்.இல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்பதால் எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும். எஃப்ஐஆரை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தச் சென்னை காவல்துறை ஆணையர் அருண் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை எனவே அவர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதாவது முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மட்டுமே தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் வெளியானதுக்கு காவல்துறை பொறுப்பாகாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஜக சார்பில் ஏற்காடு மோகன்தாஸ், அதிமுக சார்பில் ஜி.எஸ். மணி ஆகியோர் கேவியட் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் தங்களை விசாரிக்காமல் தீர்ப்பு தரக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதி நாகரத்தினம் அமர்வில் இன்று (27.01.2025) விசாரணைக்கு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)