/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1171.jpg)
கரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தவணை கேட்டு கெடுபிடி செய்யும் நிதி நிறுவனங்கள், வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு, வருவாய் மூலங்கள் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசின் நிவாரண உதவிக்காக வெகுசன விளிம்புநிலை மக்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அரசு கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், தனியார் என்.ஜி.ஓ. மற்றும் நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கூட்டுறவு வங்கிகள், தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள், அமைப்பு சாரா வங்கிகள் ஆகியவற்றில் கடன் பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் வாழ்வாதாரம் பெரிதும் முடங்கியுள்ள நிலையில், கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள், மகளிர் குழுக்களிடம் கடன் அசல், வட்டி, அபாரத வட்டி கேட்டு கறார் காட்டிவருவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. சில நிறுவனங்கள் குண்டர்கள் மூலம் ஆட்களை அனுப்பி மிரட்டுவது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன. இதனால் கடன் பெற்ற மகளிர் குழுவினர் கையறு நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் புகார்கள் சென்றன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கடன் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''கரோனா அதிகமாக பரவிவரும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்களிடமிருந்து தவணை தொகை வசூலிப்பதற்கு முனைப்பு காட்டுவதை விடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு கடன் வசூல் செய்யும் கடினமான போக்கைத் தவிர்க்க வேண்டும்.
மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்து பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள், நுண் கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி சார்ந்த அமைப்புகள் அனைத்திற்கும் பொருந்தும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் நிதி சார்ந்த அமைப்புகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்'' என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)