ADVERTISEMENT

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை விரைந்து மீட்டுத்தர வேண்டும்” - அன்புமணி வலியுறுத்தல்

05:42 PM Jan 13, 2024 | ArunPrakash

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறுகச் சிறுக சேர்த்து செலுத்திய பணத்தை மீட்கும் விஷயத்தில் காவல்துறை காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

மதுரை சின்ன செக்கிக்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு மதுரம் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் புதிய நிதி நிறுவனம் ஒன்று கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை, வேலூர், விழுப்புரம், சென்னை, ராமநாதபுரம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த நிறுவனத்தின் கிளைகள் திறக்கப்பட்டன. முகவர்கள் மூலம் பொதுமக்களை சந்தித்த இந்த நிறுவனத்தின் நிர்வாகம், தங்கள் நிதிநிறுவனத்தில் தவணைமுறையில் பணம் கட்டினால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கட்டிய தொகைக்கு மேல் 50% சேர்த்து வழங்கப்படும். இல்லாவிட்டால், அதற்கு இணையான மதிப்புக்கு நிலம் வழங்கப்படும் என்று ஆசை காட்டினர். இதை நம்பி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பணம் கட்டத்தொடங்கினர்.

வேலூரில் அமைக்கப்பட்ட கிளையில், திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்களும் மாதத்திற்கு ரூ.1000, ரூ.600, ரூ.2000 என ஐந்தாண்டுகளுக்கு பணம் செலுத்தினர். ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணம் செலுத்திய எவருக்கும் மதுரம் புரமோட்டர்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பித் தரவில்லை. வேலூரில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டிருந்த அதன் கிளைகள் மூடப்பட்டன. இது தொடர்பாக 2016ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மதுரம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை நடத்திய மதுரையை சேர்ந்தவர்கள் சரவணக்குமார், நமச்சிவாயம், கணேசன், கதிரவன் ஆகிய நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல இடங்களில் அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது நடந்து 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணம் செலுத்தியவர்களுக்கு திருப்பித் தரப்படவில்லை. எப்போது பணம் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை.

மதுரம் புரமோட்டர்ஸ் மட்டுமின்றி, மேலும் பல இடங்களில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகளிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மையாகும். வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் ஒரு லட்சம் பேரிடம் ரூ.6,000 கோடியை முதலீடாக பெற்று ஏமாற்றியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா கோல்டு நிறுவனம் 93,000 பேரிடம் ரூ.2125 கோடியையும், திருச்சியைச் சேர்ந்த எல்பின்ஸ் நிதி நிறுவனம் 7,000 பேரிடமிருந்து ரூ,.500 கோடியையும் முதலீடாக வசூலித்து திருப்பித் தராமல் ஏமாற்றியிருப்பதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.8,625 கோடி ஆகும். இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்தாலும்கூட, குற்றவாளிகள் இன்னும் முழுமையாக கைது செய்யப்படவில்லை; சொத்துகள் பறிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மோசடி நிறுவனங்கள் காளான்களைப் போல உருவெடுத்து மக்களை ஏமாற்றுவதற்கான காரணங்களில் மக்களின் விழிப்புணர்வின்மை 10% என்றால், மீதமுள்ள 90% காவல்துறையின் அலட்சியம் தான். தமிழ்நாட்டில் மூடப்பட்ட நிதி நிறுவனங்கள் எதுவும் கடந்த மாதம் தொடங்கி இந்த மாதம் மூடப்பட்டவை அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே அந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுப்பக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்தன. இவை எதுவும் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அதனால் நிதி நிறுவன மோசடிகளுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு தான் பொறுப்பேற்க வேண்டும்.

மதுரம் புரமோட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் பணத்தை திரும்பப்பெற்றுத் தராததை நியாயப்படுத்த முடியாது. மக்கள் உழைத்துச் சேர்த்த பணத்தை அவர்களுக்கு திரும்பப் பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கடமை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில் அனைத்து நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகளையும் விரைவுபடுத்தி, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும். அதற்கான பணிகளைக் கண்காணிப்பதற்காக டி.ஜி.பி நிலையிலான காவல் அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமிக்கவும் அரசு முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT