Financial Institutions Fraud Economic Crimes Police Investigation!

Advertisment

திருச்சியில் இயங்கிவந்த எல்ஃபின் எனும் நிதி நிறுவனம் அதிக வட்டி என விளம்பரம் செய்து மக்களிடமிருந்து அதிகளவில் நிதி வசூலித்து ஏமாற்றியது. இந்நிலையில், நிதி நிறுவனத்தை நடத்தி வந்த ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் அவரது சகோதரர் எஸ்.ஆர்.கே. ரமேஷ் ஆகியோர் அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சென்றனர். இது குறித்து முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த நிதி நிறுவனத்துடன் தொடர்புடையோர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருச்சி மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளருமான பிரபாகரன் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நேற்று காலை பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி ராஜ்குமார், டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில்; திருச்சியில் எல்ஃபின் நிறுவனத்துடன் தொடர்புடைய 18 பேரின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று(12ம் தேதி) சோதனை நடந்தது. தமிழகம் முழுவதும் 38 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது” என்று தெரிவித்தனர்.