Skip to main content

நிதி நிறுவன மோசடி வழக்கு; சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Financial Institution Fraud Case; 20 years in jail for Subiksha Subramanian

 

சென்னை அடையாறு பகுதியில் ‘விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டு பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், முதலீடுகளுக்கு அதிகமான வட்டி தருவதாக கூறியதை நம்பிய பல பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

 

அவர் அளித்த அந்த புகாரின் பேரில், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள் என 17 நிறுவனங்களின் இயக்குநர்களான சுபிக்‌ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் போது இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். தலைமறைவான அப்பாதுரை, இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (20-11-23) நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த வழக்கில் தொடர்பான சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்ற இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு ரூ.191.98 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், இதில் 180 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமிக்கு பாலியல் தொல்லை; கணவன் மனைவிக்குச் சிறைத் தண்டனை!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Jail sentence for husband and wife who misbehaved with girl

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காங்கேயன்(36) - விஜயலட்சுமி (34) தம்பதிகள். இவர்கள் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் (கடந்த 12.07.2016) தனது கடைக்கு வந்த ஏழு வயது சிறுமி கல்லாவில் இருந்து காசு திருடி விட்டதாகக் கூறி, சிறுமியின் ஆடைகளை அகற்றி போட்டோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவன் காங்கேயனுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை ஐந்தாயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி விஜயலட்சுமிக்கு 18 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை 2500 அபராதமும் விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இருவரும் வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

Next Story

சிறையில் சிக்கிய குட்டி செல்போன்; ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை சம்பந்தமாக தமிழக தலைமைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகள் உள்ள சிறையில் செல்போன் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரல் அளவு கொண்ட செல்போனை பொறி வைத்து காவல் துறையினர் பிடித்துள்ளனர். பூவிருந்தவல்லியில் உள்ள தனிக் கிளைச் சிறையில் சிறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் லீ பிரிட்டோ காவலர்கள் குழுவுடன் சிறையில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 1 வது ப்ளாக்கில் படிக்கட்டின் கீழே கை விரல் அளவே கொண்ட செல்போன், சிம் கார்டு, மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 3 பேட்டரி பறிமுதல் செய்தனர்.

Little Cell Phone Trapped in Jail; The sensation in the Armstrong case

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ள ஜேம்ஸ் லீ பிரிட்டோ பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து கஞ்சா வழக்கில் கைதான மாறன் மற்றும் கொள்ளை வழக்கில் கைதான பாஸ்கர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ள பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறையில் உள்ள 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.