Financial fraud case: Son of BJP leader who was  arrested!

Advertisment

சேலத்தில்நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகரின் மகனை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் தாதகாப்பட்டி குமரன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (51). பாஜக பிரமுகரானஇவர்சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில்'ஜஸ்ட்வின் ஜடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலும் கிளை அலுவலகங்களை திறந்து இருந்தார். இந்நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்.

இதை நம்பிய முதலீட்டாளர்கள் ஏராளமான முதலீடுகளைக் கொட்டினர். ஆனால் பாலசுப்ரமணியம் உறுதியளித்தபடி வட்டி, அசல் தொகையைத் திருப்பித் தரவில்லை. நெருக்கடி முற்றியதை அடுத்துஅவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சேலத்தில் உள்ள ஜஸ்ட் வின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Advertisment

இதையடுத்துபாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். முதலில்திருச்சியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜெயராஜ் என்பவர் புகார் அளித்தார். அந்தப் புகாரில்பாலசுப்ரமணியம், அவருடைய மகன் வினோத்குமார் ஆகியோர் தன்னிடம் 2 லட்சம் ரூபாய் முதலீடாகப் பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தார்.

அதன்பேரில்அவர்கள் இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜன் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவினர்அவர்களைத் தேடி வந்தனர். முதல் கட்டமாக பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர். மேலும், ஜஸ்ட்வின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர்.

இது ஒருபுறம் இருக்க, தலைமறைவாகிவிட்ட வினோத்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தின் மூலம் 400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை 110 பேரிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றுள்ளதாகவும், அதன்மூலம் 2.50 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

Advertisment

இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த வினோத்குமார் (31)மே 8ம் தேதிசேலத்தில் ஓரிடத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை பொருளாதார குற்றப்பிரிவினர் கைது செய்தனர். மோசடி செய்த பணத்தில் சொத்துகள் வாங்கப்பட்டதா? எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது? இந்த மோசடியில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? அரசியல் பின்னணி உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தினர்.

பின்னர், வினோத்குமாரை கோவையில் உள்ள 'டான்பிட்' நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.