Finance Minister Palanivel Thiagarajan at the review meeting

Advertisment

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “பொதுவாக நிதி மேலாண்மையும், ஆளுமையும், நல்லாட்சியும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். நிதியைத் தேவையான அளவில் ஈட்டுவது, அதனை முறையாக ஈட்டுவது, யாரிடம் இருந்து எவ்வளவு நிதி ஈட்ட வேண்டும் உள்ளிட்டவற்றைக் கண்டறிய வேண்டும். அதேபோல், அதனைச் சரியாகச் செயல்படுத்துவதுதான் அரசாங்கத்திற்கு அழகு.

அடிப்படை பொருளாதாரத்தின்படி, மூலதனச் செலவை எந்தெந்த மாநிலம் அதிகமாக்குகிறதோ, அந்தந்த மாநிலங்களில் வளர்ச்சி இருக்கும். சாலைகள், சிறு துறைமுகங்கள், கட்டிடங்கள், தனியார் முதலீடு ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சியானது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்கும்.

Advertisment

2016- 2021 கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் வருமானம் என்பது உற்பத்தியில் 10 சதவீதமாக இருந்தது. திமுக தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 11.5 சதவீதமாக இருந்த இந்த வருமானம் பின்னர் 7.5 சதவீதமாகக் குறைந்து, தற்போது கரோனா காலத்தில் 6.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. சுமார் 70,000 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வர வேண்டியுள்ளது. இது குறித்து வெள்ளை அறிக்கையில் விவரம் வெளியிடப்படும். எந்தெந்த துறைகளிலிருந்து எவ்வளவு தரவேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காகச் சொல்லப்படுவது அல்ல.

நிதி ஆதாரங்களைத் திருத்துவதன் மூலம் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியும். உதாரணமாக 80,000 கோடி என்பது நிதிநிலையில் ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி துறை, கல்வி ஆகிய மூன்று துறைகளுக்கும் சேர்த்துச் செய்யப்படும் செலவினம் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த மூலதன செலவு ஒரு லட்சம் கோடி கூட செலவிடவில்லை. அதாவது வருடத்திற்கு இருபத்தி ஐந்தாயிரம் கோடி கூட செலவிடவில்லை. நல்லாட்சியின் அடையாளம் என்பது உற்பத்தியில் 3 சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் கடந்த வருடம் உற்பத்தியில் 1.5 சதவீதம் கூடச் செய்யவில்லை. அதனால் கூடுதலாக 30 ஆயிரம் கோடி முதல் 40,000 கோடி வரை மூலதன செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இதுவரைக்கும் செய்ததைவிட இரண்டு மடங்கு செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி கூடுதலாக சாலை, விவசாயம், குடிநீர், துறைமுகங்கள் ,விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளிலும் முதலீடு செய்திட வேண்டும். இதனைச் செய்தால்தான் வளர்ச்சியில் தெளிவான பாதையில் செல்ல முடியும். முதலமைச்சர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்; 'இந்தியாவிலேயே ஏன் தென் கிழக்கு ஆசியாவிலேயே மூலதனம் செய்யக் கூடிய இடமாக தமிழ்நாடு திகழவேண்டும். உலக அளவில் மனித வளம் மிகுந்த மாநிலமாக, இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்பவர்களைச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக மாற்றும் வகையில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் இலக்கு. இதற்காக பல அடிப்படைத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அத்தகைய திருத்தங்களைக் கொண்டு வரத் தயாராக இருக்கிறோம்’ என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

உலகத்திலேயே சிறந்த பொருளாதார நிபுணர்கள் வைத்து அமைக்கப்பட்ட குழுக் கூட்டத்தில் இதனை முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதற்கெல்லாம் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் மிகவும் முக்கியமானவை. மூலதன செலவை இரண்டு மடங்கு ஆக்கிட வேண்டும். அதற்கு நிதி எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வரக்கூடிய வருமானத்திற்கு சரியான முறையில், சரியான நேரத்தில் அவை செலவிடப்பட வேண்டும்” எனக் கூறினார்.