ADVERTISEMENT

“நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை” - அமைச்சர் உதயநிதி

11:05 PM Dec 22, 2023 | prabukumar@nak…

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. அதே சமயம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஒருவர், “கேட்கும் போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம்மா?” எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரிப் பணத்தைதானே கேட்கிறோம்' எனப் பேசி இருந்தார்.

ADVERTISEMENT

இந்த பேச்சுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், 'அவருடைய தாத்தா திட்டுவதென்றால் கூட அழகு தமிழில் திட்டுவார். நீங்கள் கலைஞர் உரிமைத் தொகை கொடுக்கும் பொழுது நாங்கள் கேட்கலாம் அல்லவா? இது என்ன உங்கள் வீட்டு காசா என்று கேட்கலாமா? பிரதமர் வீடு கட்டும் திட்டம் என்று ஆரம்பித்தார்கள். அதற்கு பிரதமரா காசு கொடுக்கிறார்கள் என்று கேட்டார்கள். அப்ப கலைஞர் உரிமைத் தொகை என்றால் கலைஞர் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறார்கள். இந்த மாதிரி வார்த்தைகளை முதலில் அடக்கவில்லை என்றால் உதயநிதியை ஒரு எதிர்மறை தலைவராகத்தான் இந்தியா கூட்டணியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்கொள்ளப் போகிறது' என்றார்.

ADVERTISEMENT

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் அப்படி பேசியது தப்புன்னு சொல்றாங்களா. நான் வேணும்னா இப்படி சொல்லட்டுமா. மாண்புமிகு ஆளுநருடைய அப்பா சொத்தை நாங்க கேக்கல. மாண்புமிகு மத்திய அமைச்சரோட அப்பா சொத்தை நாங்க கேட்கல. தமிழக மக்கள் கட்டும் வரிப் பணத்தை தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதைப் பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கலைஞரைப் போல, சிலரிடம் திமுக தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக திமுக அரசு நிவாரண நிதி கேட்டால், ‘நாங்கள் என்ன ஏ.டி.எம்மா’ என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று கூறினேன். என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய நிதியமைச்சர் .நிர்மலா சீதாராமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம். வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்துவிட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT