/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4581.jpg)
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்தி குமார். இவர், சமயபுரம் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ஸ்ரீ நாராயணா மஹால் திருமண மண்டபத்திற்கு இருசக்கர (பல்சர்) வாகனத்தில் சென்றுள்ளார்.
சுப நிகழ்ச்சி முடித்துக் கொண்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தைப் பார்த்தபோது காணாமல் போயிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் காவல்துறையினர் திருமண மஹாலில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் திருமண மண்டபத்திற்குள் வருவதும் அதில் ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு நோட்டமிட, மற்றொரு வாலிபர் வி.ஏ.ஓ. சக்தி குமாரின் இருசக்கர வாகனம் மீது அமர்ந்து காலால் லாவகமாகசைட் லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vck ad_1.jpg)
இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் போலீஸார் உடனடியாக, நம்பர் 1 டோல்கேட் சுற்றி பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதேசமயம், அந்த இருவர் குறித்து விசாரணையிலும் ஈடுபட்டனர். அதில், லால்குடி அருகே கீழவாளாடி, கீழத் தெருவைச் சேர்ந்த சகாயராஜ் என்பவர் வி.ஏ.ஓ. சக்தி குமாரின் வாகனத்தை திருடுவதற்கு உதவி செய்திருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவரைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில், “வி.ஏ.ஓ. சக்தி குமார், கடந்த 2021ம் ஆண்டு பஜாஜ் பைனான்ஸ் மூலம் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அதற்கான மாதத் தவணையாக 4 ஆயிரம் கட்டி வந்தார். ஆனால், ஒரு தவணையை அவர் செலுத்தவில்லை. இதனால், அவரின் காசோலை வங்கியில் போடப்பட்டது. ஆனால், இரண்டு முறை பவுன்ஸ் ஆனது. இதனால், ஒரு தவணை 4 ஆயிரம் செலுத்தவில்லை என ஒரு வருடத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு ரூ. 36,000 செலுத்தாமல் இருந்ததால் வாகனத்தை பக்கவாட்டு பூட்டை உடைத்து தன்னுடன் வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர் எடுத்துச் சென்றார்” எனக் கூறியதைக் கேட்டு போலீசாரும்வாகனத்தின் உரிமையாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் வி.ஏ.ஓ. சக்திகுமாரிடம் விசாரித்தபோது, கடந்த 2021 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தை பஜாஜ் பைனான்ஸில் தவணை முறையில் வாங்கி, அதற்கு மாதம் தவறாமல் 4 ஆயிரம் தவணை செலுத்தி 2022இல் முடித்துள்ளேன் எனத்தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் பிடிபட்ட சகாயராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமைறைவாக உள்ள இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிய பஜாஜ் பைனான்ஸின் மற்றொரு ஊழியர் சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)