A final trial? Interim relief? - OPS appeal case hearing today

‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

Advertisment

வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்குமாறு பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு ஆகியவற்றை அவசர வழக்காக ஏற்று விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மாதம் மார்ச்28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

கடந்த 31 ஆம் தேதி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரது மனுக்கள் ஒன்றாக நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்புவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையைத் தொடங்கும்போதே இறுதி விசாரணை நடத்துவதற்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒப்புக் கொள்கிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்து இருதரப்பும் வாதங்களையும் வைத்தனர்.

தனி நீதிபதி முன்பு நடந்த விசாரணை குறித்து ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அதில் 'ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கியது அதிமுகவின் விதிகளுக்கு எதிரானது. இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும். என்னை (ஓபிஎஸ்) நீக்கியதில் சட்ட விதிமீறல்கள் உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்துள்ளார். என்னை நீக்கியது தவறு என்றால் அதன் பின் நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும்?' என வாதங்களை வைத்தது ஓபிஎஸ் தரப்பு.

Advertisment

அதேபோல் எடப்பாடி தரப்பில் 'தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் முறை இல்லை. பொதுச் செயலாளர் முறை மட்டுமே உள்ளது. சட்டமன்றத்தில் ஓபிஎஸ்-ன் இருக்கையை மாற்றக்கோரி சபாநாயகரிடம் முறையிட்டுள்ளோம். குறைந்தபட்சம் 10 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருப்பதாக தெரியவில்லை’ என்ற வாதத்தை வைத்தது.

இறுதி விசாரணை என நீதிபதிகளும், இடைக்கால நிவாரணம் என ஓபிஎஸ் தரப்பும் வியூகம் கொடுத்திருந்த நிலையில், வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஏப்ரல் 3 ஆம்தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் இறுதி விசாரணையா? அல்லது ஓபிஎஸ் தரப்புக்கு இடைக்கால நிவாரணமா? என முடிவெடுத்து நீதிமன்றம் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற இருக்கிறது.