ADVERTISEMENT

முதல்வர் அடிக்கல் நாட்டிய ஃபின்-டெக்;  திமுக அரசுக்கு அடுத்த நெருக்கடி

12:23 PM Jun 21, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மற்றும் நிதித்துறை வளர்ச்சிக்கு ஏதுவாகவும் மேம்பட்ட நிறுவனங்களின் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்திடும் வகையில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரம் ஆகிய திட்டங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ செயல்படுத்த உள்ளது. ரூ. 116 கோடி நிதியில் 56 ஏக்கர் பரப்பளவில் இந்த நிதிநுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 17 ஆம் தேதி நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்த நிதிநுட்ப நகரம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி சென்னை கே.பி.பார்க்கில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளைக் கட்டிய பி.எஸ்.டி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2016 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் சார்பில் 1920 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்ட முடிவு செய்யப்பட்டது. சென்னையில் கே.பி.பார்க் எனப்படும் கேசவபிள்ளை பூங்காவில் குடியிருப்புகளை அமைக்க பி.எஸ்.டி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ரூ. 112 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்புகளை பி.எஸ்.டி நிறுவனம் கட்டி முடித்தது. இதனைத் தொடர்ந்து குடியிருப்புகள் தரமின்றி இருப்பதாக செய்திகள் வெளியானது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது கட்டடத்தின் பூச்சு கையோடு உதிர்ந்து கொண்டு வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த விவகாரம் திமுக அரசு பொறுப்பேற்ற பின் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டடம் குறித்து ஆய்வு செய்ய ஐஐடி குழு அமைக்கப்பட்டது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. அதே சமயத்தில் ஐஐடி குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தரமற்ற முறையில் கட்டடத்தை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் தற்போது நிதிநுட்ப நகரம் கட்ட திமுக அரசு பி.எஸ்.டி நிறுவனத்திற்கே ஒப்பந்தம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2009 ஆம் ஆண்டு, கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப நகர உருவாக்கத்திற்கு தற்போது பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 14 ஆண்டுகளாக ஒரு செங்கல் கூட வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்டி நிறுவனம், தரம் குறைவான கட்டடங்களைக் கட்டியதாக இதே திமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் என்பதுதான் விந்தை.

தரம் குறைவான கட்டடங்களைக் கட்டியதாக பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் மீது புகார் வந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைத்த IIT ஆய்வுக்குழு அறிக்கையில், இந்த நிறுவனம் கட்டிய ஏழை மக்களுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள பூச்சுவேலை 90% தரமற்றது என்றும், இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்றும் சட்டசபையில் திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். இனிமேல் அரசுப் பணிகள் பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கப்படாது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 250 கோடி மதிப்பில் அமையவுள்ள நிதிநுட்ப நகரத்திற்கான கட்டுமான பணிக்கு இதே பிஎஸ்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது திமுக அரசு. இனிமேல் அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் அரசுப் பணி ஒப்பந்தம் வழங்கி அழகு பார்க்கிறது திமுக அரசு. ஐஐடி ஆய்வறிக்கை என்ன ஆயிற்று? அதன் மேல் திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்கள் வரிப்பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடாமல், இடையில் யாரோ சம்பாதிக்க, ஏற்கனவே தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதா? உடனடியாக, பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரக் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீதான ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT