film producers association chennai high court

Advertisment

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியைத் தேர்தல் அதிகாரியாக நியமித்து, தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரனை தேர்தல் அதிகாரியாக நியமித்து, தேர்லை ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.

கரோனா ஊரடங்கு காரணமாக, இந்த காலக்கெடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை சார்பில், தயாரிப்பாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியம் தொகையைச் செலுத்தவில்லை எனவும், கரோனா பரவி வரும் நிலையில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியம் செலுத்துவது உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்த, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கிக் கணக்கை கையாள, தேர்தல் அதிகாரிக்கு அனுமதியளிக்கக் கோரி, தயாரிப்பாளர்கள் சோலையன், குருசங்கர், ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

அந்த மனுவில், தயாரிப்பாளர்கள் நல அறக்கட்டளையில், தயாரிப்பாளர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் தொகையைக் காப்பீட்டு நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனவும், மனுவுக்குப் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்பு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 20- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார் நீதிபதி சதீஷ்குமார்.