
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நாடோடிகள்' படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வழக்கறிஞருடன் சென்ற சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சாந்தினி, பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2017ஆம் ஆண்டு பணி நிமித்தமாக சென்னை வந்தபோது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் நெருங்கி பழகிய முன்னாள் அமைச்சர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சேர்ந்து வாழ்ந்துவந்தார். அதன் விளைவாக மூன்றுமுறை தான் கருவுற்ற நிலையில், தம்மை வலுக்கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். மேலும், தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சாந்தினி, ''நாங்கள் தனியாக 5 வருஷமாக குடும்ப நடத்த ஆரம்பித்தோம். அவர் எனக்கு கொடுத்த வாக்கு, அவருடைய மனைவியை விவகாரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். ஆனால் இறுதியில் என்னை ஏமாற்றிவிட்டார். மனதளவிலும் உடலளவிலும் ஏமாற்றிவிட்டார். இரண்டு வாரமாக என்னை மிரட்ட ஆரம்பிக்கிறார். ‘நீ இதுபோன்று ஏதாவது புகார் கொடுத்தால் ராமநாதபுரத்தில் இருக்கிற ரவுடிகளுக்கு ஒரு லட்சம் பணம் கொடுத்து உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறார்'' என கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தனியார் சேனலில் விளக்கம் அளித்த முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்தக் கும்பல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், “நான் தவறு செய்யவில்லை. நான் ஏன் பயப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.