
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது குத்தாம்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளையராஜா-வாணிஸ்ரீ (26) தம்பதியர். இவர்களது வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் ராஜேந்திரன்-இளவரசி(45) தம்பதியர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது ஒருவருக்கொருவர் சாடை மாடையாக திட்டிக்கொண்டு இருப்பது வழக்கம். சம்பவத்தன்று இருவருக்குமிடையே நேருக்கு நேர் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு உள்ளனர்.
இந்த வாய்த்தகராறு போது இளவரசி, வாணிஸ்ரீயை கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த வாணிஸ்ரீ வீட்டில் எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வாணிஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கேள்விப்பட்ட அவருடன் சண்டையிட்ட இளவரசி பயந்துள்ளார்.
வாணிஸ்ரீ இறந்து போனதால் அவர் தன்னால் தான் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் என போலீஸ் வழக்கு போடும் அதனால் மேலும் மேலும் பிரச்சனை வருமோ என்று பயந்த இளவரசி தனது வீட்டில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர் வீட்டுப் பெண்கள் ஒருவரை ஒருவர் முன்விரோதம் காரணமாக திட்டிக் கொண்ட சம்பவத்தில் இருவருமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.