The fight that came from the improper relationship! Youth passed away

கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தை அடுத்த கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவரின் மகன் உதயராஜா(28). இவர், டிப்ளமோ சிவில் இஞ்சினியர் முடித்துவிட்டு கட்டிட பணிகளையும், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வைத்தும் வேலை செய்து வந்தார். இவரிடம் பெண்ணாடம் கருங்குழிதோப்பு பகுதியில் வசிக்கும் ஆனந்தபாபு என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். ஆனந்தபாபுவிற்கும் பெண்ணாடம் அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவருக்கும் முறையற்ற தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதே பெண்ணுடன் தொளார் கிராமத்தில் வசிக்கும் தர்மராஜ் என்பருக்கு ஏற்கனவே முறையற்ற தொடர்பு இருந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், அப்பெண் முதலாவதாக பழகிய தர்மாராஜிடம் கடனாக ரூ. 5,000 பெற்றுள்ளதாக கூறுப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பெண் தற்போது உறவில் இருக்கும் ஆனந்தபாபுவிடம் தெரிவித்த நிலையில், ஆனந்தபாபுவிற்கும் தர்மராஜுக்கும் செல்போனில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு ஆனந்தபாபு, பெண்ணாடம் புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதை அறிந்த தர்மாராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அதீத மது போதையில் ஆனந்தபாபுவை தாக்கியுள்ளனர். அப்போது அவருடன் இருந்த உதயராஜா, இரு தரப்பையும் சமாதானப்படுத்தி சண்டையை தடுக்க முயன்ற போது உதயராஜாவையும் கற்கள் மற்றும் உருட்டுகட்டையால் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் உதயராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆனந்தபாபு பலத்த காயம் ஏற்பட்டு, தரையில் மயங்கி கிடந்தார். இருவரையும் சரமாரியாக தாக்கிய கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பெண்ணாடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், உயரிழந்த உதயராஜாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் கொண்டு சென்றனர். மேலும் பலத்த காயமடைந்த ஆனந்தபாபுவை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தேடிவந்த நிலையில் முதற்கட்டமாக மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முக்கிய கொலை குற்றவாளியான தர்மராஜ், பிரசாந்த் உள்ளிட்ட மூன்று நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தக் கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த, விழுப்புரம் டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்.பி சக்தி கணேஷ் நேரில் விசாரணை செய்து, கொலை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டனர். மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.