
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் நேற்று (24.08.2021) இரண்டு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது சம்பந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டு, 16 பேர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
திருச்சி, கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கார் நின்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த மாட்டை ஒரு நபர் துரத்திக்கொண்டிருந்துள்ளார். அவர் மாட்டின் மீது கல்லை எரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கல் கார் மீது பட்டு கார் கண்ணாடி உடைந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் துவங்கி பின் கைகலப்பு உருவானது. இதுகுறித்து பொன்மலை போலீசார் இரு தரப்பினர் கொடுத்த புகார் மனுக்கள் மீதும் வழக்குப் பதிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.