ADVERTISEMENT

நெடுவாசலில் ஏப்ரல் 12 ந் தேதி நடப்பதாக இருந்த போராட்டம் தள்ளிப் போக வாய்ப்பு

02:29 PM Apr 11, 2018 | rajavel

ADVERTISEMENT



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, நீட் ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தொடந்து போராட்டங்கள் நடப்பதால் நெடுவாசலில் ஏப்ரல் 12 ந் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக உயர்மட்டக்குழு தலைவர் கூறினார்.

ADVERTISEMENT

நெடுவாசல் திட்டம் :

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி ஒப்பந்தம் வழங்கியது. இந்த அறிவிபப்பை தொடர்ந்து 16 ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் திரண்ட விவசாயிகள், மாணவர்கள், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியத் தலைவரிடம் மனு கொடுத்தனர்.

196 நாட்கள் போராட்டம் :

ஆனால் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடாத நிலையில் போராட்டம் வலுவடைந்து நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் போராட்டத்தை நடத்தினார்கள். இந்த முதல்கட்ட போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரைத்துறையினர் என்று தினம் தினம் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்தது. அதே போல நெடுவாசலை சுற்றியுள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 கிராம விவசாயிகள் விவசாய கருவிகள், விளை பயிர்களுடன் வந்து கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையாலும் மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது.

நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு கிராமத்திலும் தொடர் போராட்டங்கள் நடந்தது. அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கணேஷ் 2017 டிசம்பர் இறுதிக்குள் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் அகற்றப்பட்டு விவசாயிகளிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதிமொழி கடிதம் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

போராட்டம் அறிவிப்பு :

இந்த நிலையில் நெடுவாசல் திட்டம் அறிவித்த ஒரு வருடம் முடிந்த நிலையில் கடந்த பிப்ரவரி 18 ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் போராட்ட உயர்மட்டக்குழு தலைவர் புஸ்hரஜ் தலைமையில் மெய்யநாதன் எம்.எல்.ஏ மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் சுற்றவட்டார கிராம மக்கள் பங்கேற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்.. மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்தபடி நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு கருக்காக்குறிச்சி, வாணக்கன்காடு ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகளை அகற்றி நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியதுடன் இந்த தீர்மானங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாத பட்சத்தில் ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் போராட்டம் தொடங்கும் என்று அறிவித்தனர்.

போராட்டம் தள்ளிக் போகும்..

ஆர்ப்பாட்டத்தில் அறிவித்தபடி ஏப்ரல் 12 ந் தேதி நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்தப்படுமா என்று உயர்மட்டக்குழு தலைவர் புஸ்பராஜிடம் கேட்ட போது.. என்ன வகையான போராட்டம் நடத்துவது என்று உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆனால் காலம் குறைவாக உள்ளது. அதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, நீட் தேர்வு ஆகிய திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. அந்த போராட்டங்களில் உயர்மட்டக்குழுவினரும் நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் பங்கேற்று உள்ளதால் நெடுவாசல் போராட்டம் முன்பு அறிவித்த 12 ந் தெதி நடப்பது சாத்தியமில்லை. தள்ளிப் போகும். ஆனால் நிச்சயம் நெடுவாசல் போராட்டம் நடக்கும் அது எப்போது என்ன போராட்டம் என்பது பற்றி உயர்மட்டக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும். அப்போது அந்த போராட்டம் ஒட்டுமொத்த அரசாங்கமும் திரும்பிப் பார்க்கும் போராட்டமாக இருக்கும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT