Skip to main content

விபத்தில் இறந்த காதலன்! இளம் பெண் எடுத்த நெகிழ்ச்சி முடிவு! 

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

fiance passed away young woman stay with her mother in law

 

10 ஆண்டுகளாக காதலித்து திருமணமாக பத்து நாட்களே இருந்தநிலையில் காதலன் இறந்துவிட, அவரின் நினைவாக காதலன் வீட்டிலேயே வாழ்ந்துவருகிறார் இளம் பெண் ஒருவர்.  

 

நாகை மாவட்டம், பூவைத்தேடி அடுத்துள்ள பிராபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், பத்மாவதி தம்பதியினரின் மகன் சபரிகிருஷ்ணன். 26 வயதான இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வந்தார். இவரும் மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் பகுதியைச் சேர்ந்த ஜெயா - மோகன் தம்பதியின் மகள் ரேவதியும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு அழைப்பிதழ் அடித்து திருமண ஏற்பாடுகளும் நடத்திவந்தனர். 

 

10 ஆண்டுகள் காதலித்த இருவரும் ஒன்று சேர 10 நாட்களே இருக்கும் நிலையில், 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி வேளாங்கண்ணியில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும்போது சபரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதீத மன உளைச்சலுக்கு ஆளான ரேவதி, காதல் கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் காதல் கணவரின் இழப்பை நினைத்து யோசிக்காமல், மகனை இழந்து வாடும் தனது கணவரின் வயதான, தாய் தந்தையின் நிலைமையை நினைத்து கவலையுற்ற ரேவதி, அவர்களோடு வாழ முடிவெடுத்துள்ளார்.

 

fiance passed away young woman stay with her mother in law

 

இதனால் ரேவதி, இறந்த காதல் கணவரின் வீட்டிற்கு சென்று தனது மாமியார் மாமனாருடன் வசித்துவருகிறார். மருமகள் தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவாக நாங்கள் எங்கள் மருமகளை பார்த்து வருவதாக கண்ணீர் மல்க கூறுகிறார் தாய் பத்மாவதி. 


வேளாங்கண்ணி பேராலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து சிரமப்பட்டு வரும் சபரி கிருஷ்ணனின் தந்தை கோவிந்தராஜ், கூலி வேலைக்கு செல்லும் அவருடைய சகோதரர் என ஒட்டுமொத்த குடும்பமும் அரசு வேலையில் இருந்த சபரிகிருஷ்ணனின் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், தற்போது கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.


சபரிகிருஷ்ணனின் இறப்பிற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறிய மின்வாரிய அலுவலர்கள் 8 மாதங்களாகியும் கண்டுகொள்ளவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சபரிகிருஷ்ணனின் உறவினர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்