
சேலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநகரப் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் நடத்திவருகிறது.
சேலம் மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்படுகின்றனர். சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 2,732 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 1.32 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 3) 28 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 4,132 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி (இன்று), காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை புதிய திருச்சி கிளை சாலை, திரு.வி.க. நகர், தர்ம நகர், அண்ணா சாலை, சின்ன திருப்பதி, சிவதாபுரம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரை பாலகாந்தி சாலை, வையாபுரி யாதவ் தெரு, காமராஜர் காலனி, கோரிமேடு, மெய்யனூர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
பகல் 12 மணிமுதல் 2 மணிவரை அரியாகவுண்டம்பட்டி, காசக்காரனூர், காந்தி சாலை, பாரதி நகர், அன்பு நகர், கோவிந்தன் தெரு, வாசகசாலை, கிருஷ்ணன் புதூர், வித்யா நகர், எஸ்எம்சி நகர் காலனி, தார்ப்பாய் காடு, சஞ்சீவிராயன் பேட்டை, அம்மாள் ஏரி சாலை 6வது குறுக்குத் தெரு, தீயணைப்பு நிலையம், பஞ்சந்தாங்கி ஏரி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கிறது. மேலும், காலை 9 மணிமுதல் 1 மணிவரை குகையில் உள்ள குருசாமி பள்ளியில் சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நடத்தப்படும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களைப் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.