
விழுப்புரம் அருகில் உள்ளது மரகதபுரம் கிராமம். இந்த ஊர், தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் கொண்டாடும் முகரம் பண்டிகையை ஒட்டி அங்குள்ள மசூதி முன்பு தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம்.
கரோனா நோய்த்தொற்று காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று முன்தினம் (18.08.2021) இரவு இங்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி மசூதியைச் சுற்றிலும் அலங்கார மின் விளக்குகள் ஜொலித்தன. இரவு பதினொரு மணி அளவில் மசூதியின் உள்ளே முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்றுகூடி வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி ஆகியவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் சமைத்து, படைத்து வழிபட்டனர்.
பின்னர் இரவு பதினொன்று முப்பது மணி அளவில் முஸ்லிம்கள் மேளதாளம் முழங்க அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றுக்குச் சென்று அங்கு நீராடிவிட்டு, மீண்டும் மசூதிக்குத் திரும்பி வந்தனர். மசூதிக்கு முன்பு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் முஸ்லிம் பெரியவர் தீ மிதித்து இறங்கினார். அப்போது அவருக்கு வலதுபுறம் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரும் அவருடன் சேர்ந்து தீக்குண்டத்தில் இறங்கி நடந்து சென்றனர்.
இது மத நல்லிணக்கத்தின், ஒற்றுமையின் அடையாளத்தினை உணர்த்துவதாக உள்ளது என திருவிழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்கள் குறிப்பிட்டனர். இவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் தீக்குண்டத்தில் இறங்கி, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பின்னர் மேளதாளம் முழங்க மரகதபுரத்தில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாகவும் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது ஊர் மக்கள், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றனர். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதியிலிருந்தும் இந்துக்கள், முஸ்லிம்கள் என மதம் கடந்து வந்து கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.