Skip to main content

தொடர் கனமழை; விரைவு ரயில் புறப்படும் இடங்கள் மாற்றம்

Published on 30/11/2024 | Edited on 30/11/2024
nn

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 08.30 புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக - புதுவை கடற்கரையில் காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாகக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70  முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடக்கும்  என எதிர்பார்க்கப்படும் நிலையில்  மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளைப் பத்திரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் தொடர் கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து மட்டுமல்லாது,பேருந்து போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சில ரயில்களின் புறப்படும் இடங்கள் மாற்றம் செய்யப்பட்டு ரயில்வே அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி மங்களூர் செல்லும் ரயில் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக திருவள்ளூரில் இருந்து இரவு 9:15 மணிக்கு புறப்படும். கோயம்புத்தூர் செல்லும் சேரன் விரைவு ரயில் சென்ட்ரலுக்கு பதில் சென்னை கடற்கரையிலிருந்து 10:30 மணிக்கு புறப்படும். பெங்களூர் செல்லும் வரை விரைவு ரயில் சென்ட்ரலுக்கு பதில் சென்னை கடற்கரையிலிருந்து 11:30 மணிக்கு புறப்படும். ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11:55 க்கு புறப்படும். கொல்லம் செல்லும் ரயில் சென்ட்ரலுக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்