ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ராகுல் காந்தி எம்.பி. ஆறுதல்! 

Fengal storm damage Rahul Gandhi MP Comfort

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டது. இதனால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன.

மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அதோடு, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது. அதோடு உள்கட்டமைப்பு மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதோடு, 2 லட்சத்து 11 ஆயிரத்து 139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் ஃபெங்கல் சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு குறித்து அறிந்து மனமுடைந்தேன். இந்த துயர சம்பவத்தின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள், உடைமைகள் சேதம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் மாநில அரசு நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

congress cyclone Storm
இதையும் படியுங்கள்
Subscribe