
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதுவே இதுவரை பதிவான மழையின் அளவுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாகும். இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி 21 சென்டிமீட்டர் மழை புதுவையில் பதிவாகியிருந்தது. தற்போது 46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதே சமயம் புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மீட்பு படையில் இருந்து திண்டிவனத்திற்கு 4 குழுக்களும், விழுப்புரத்திற்கு 2 குழுக்களும் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன. அதே சமயம் பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தும், பாதுகாப்பு தடுப்புகள் சரிந்தும் விழுந்துள்ளன. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கந்தாடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள கானிமேடு என்ற பகுதியை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதோடு கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்த குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.
ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கானிமேடு மற்றும் மண்டகப்பட்டு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளனர். திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் வம்பு பட்டு ஏரி நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு பெய்த கனமழையின் காரணமாக ஜலகாம்பரை நீர்வீழ்ச்சியில் கட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பெய்த தொடர் மழையால் செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் 7 மதகுகள் வழியாக 3 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக ரப்பர் படகுகள் கொண்டு அங்குள்ள பொது மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.