
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஃபெஞ்சல் புயல் மற்றும் பெரு மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில்கொண்டு, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தற்காலிகமாகச் சீரமைக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை விடுவித்திடக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில் தமிழகத்தில் இந்தப் புயல் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை விரைவில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். மத்திய குழுவினரின் ஆய்வின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் வாழ்வாதாரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மோசமான தாக்கத்தை எதிர்கொள்ள, தேவைப்படும் கூடுதல் நிதியினை வழங்கிடுமாறு பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இத்தகைய சூழலில் தான் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய அரசின் குழு நேற்று (06.12.2024) மாலை தமிழகம் வருகை தந்தனர். அதாவது மத்திய உள்துறை இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் சென்னை வந்தனர். இந்த குழுவில் மத்திய உள்துறை, பேரிடர் குழு, வேளாண்துறை, வருவாய்த்துறைகளைச் சேர்ந்த 7 பேர் இடம் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழகத்திற்கு புயல் நிவாரணமாக 944.50 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மத்தியக் குழு இன்று (07.12.2024) ஆய்வு செய்ய உள்ளது. அதன்படி இந்த குழுவினர் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். ராகேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். அதன்பின்னர் மத்தியக் குழுவினர் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளிக்க உள்ளனர்.