Advertisment

“நான் காளி மாதா, என்னை கைது செய்து தவறு செய்து விட்டீர்கள்..” - காவல் நிலையத்தில் ஆக்ரோஷமான பெண் சாமியார்! 

female preacher arrested by Dindigul Nilakottai police

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் தவயோகி சாமியார் ஒருவர் கொடுத்த மோசடி புகாரில் பிரபல பெண் சாமியார் கைது செய்யப்பட்டார்.

நிலக்கோட்டை அருகே வீலி நாயக்கன்பட்டி கிராமத்தில் தவயோகி ஞானதேவபாரதி என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த பவித்ரா (என்ற) காளிமாதா என்னும் பெண் சாமியார் ஆசிரமத்தோடு தன்னை தொடர்பில் இணைத்துக் கொண்டார். சாமியார்கள் இருவரும் தேடிவரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் மற்றும் உதவிகள் வழங்கி வந்த நிலையில், ஞான பாரதிக்கும் பவித்ராவுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது.

பவித்ரா, ஆசிரம சொத்துக்களை அபகரிக்க பார்க்கிறார் என ஞானதேவபாரதி குற்றம் சாட்டினார். ஞானதேவபாரதி, தன்னிடம் பணத்தை பிடுங்கிக் கொண்டார் என பவித்ரா குற்றம்சாட்டினார். இதனையடுத்து ஆசிரமத்தில் பல்வேறு சர்ச்சைகளும் அடிதடிகளும் நடைபெற்றன. இருவரும் மாறி மாறி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த வருடம் ஆசிரமத்தில் புலித்தோல் பதுக்கி வைத்திருப்பதாக பவித்ரா கொடுத்த புகாரில் வனத்துறையினர் ஆசிரமத்தில் சோதனையிட்டு அங்கிருந்து புலித்தோலை கைப்பற்றி ஞானதேவபாரதி மீது வழக்குப்பதிவு செய்து உதவியாளர் ஒருவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரமத்தில் மேற்பார்வையாளராக இருக்கும் மற்றொரு பெண் சாமியாரான அருள்மணி, பவித்ரா ஆசிரமத்துக்குள் புகுந்து 30 பவுன் நகை, ஐந்து லட்ச ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

female preacher arrested by Dindigul Nilakottai police

பவித்ரா, தன்னை ‘அகில இந்திய ஹிந்து யுவ மேர்ஷா தர்மாச்சார்யா’ அமைப்பை சேர்ந்தவர். எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு இருக்கிறது எனக் கூறி காவல்துறை தன்னை நெருங்கா வண்ணம் பார்த்துக் கொண்டார். மேலும் தமிழகம் முழுவதும் தான் காளிமாதா என கூறி தமிழக அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகள் என பலரும் தனது பக்தர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிக்குச் சென்று அருள்வாக்கு கூட்டம் நடத்தி பிரபலமானார்.

இந்நிலையில் தொடர் புகார் எதிரொலி காரணமாக பெண் சாமியார் மீது இருந்த மோசடி வழக்கை கையில் எடுத்த போலீசார், திண்டுக்கல்லில் இருந்த பவித்ராவை திடீரென கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட பவித்ரா, விசாரணையின் போது போலீசார் மத்தியில், “நான் காளி மாதா, என்னை கைது செய்து; தவறு செய்து விட்டீர்கள். காளி உங்களைத் தண்டிப்பாள்” என ஆவேசமாக கூறி பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து பவித்ராவின் உடனிருந்த அவர் தங்கை ரூபவதியும் கைது செய்யப்பட்டார். ஆண் சாமியார் கொடுத்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பவித்ரா நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நிலக்கோட்டையில் பிரபல பெண் சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nilakottai police
இதையும் படியுங்கள்
Subscribe