female police incident admk former mla police

Advertisment

பெண் காவலர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிமுகமுன்னாள் எம்.எல்.ஏ. ஓட்டிவந்த கார் மோதியதில் பெண் காவலர் பலத்தக் காயமடைந்தார். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதம்பி (வயது 58). கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகசார்பில் போட்டியிட்டு 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ. ஆக இருந்தார்.

நேற்று முன்தினம் (28.07.2021) தன்னுடைய காரில் ஆத்தூர் ரயிலடி தெரு வழியாக காமராஜர் சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது காமராஜர் சாலையிலிருந்து ரயிலடி தெருவை நோக்கி கருமந்துறை காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர் பிரேமலதா (வயது 28) இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

Advertisment

ஆத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்வதற்காக வாகனத்தைத் திருப்பியபோது, சின்னதம்பி ஓட்டிவந்த கார், பெண் காவலரின் வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலைகுலைந்த காவலர் பிரேமலதா, கீழே விழுந்ததில் பலத்தக் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதம்பி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தியதாக அவருடைய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.