
சேலம் அருகே, வீட்டிற்குள் பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய கணவரான ரவுடி நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், தற்போது அவருடைய கூட்டாளிகள் மூன்று பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
சேலத்தை அடுத்த சின்ன சீரகாபாடியில் உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (42). இவருடைய கணவர் ரகு. லட்சுமி, ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி கணவர்களைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ரகுவை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார். மேட்டூரைச் சேர்ந்த ரகு மீது 5 கொலை வழக்குகள் மற்றும் ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என காவல்துறையில் 33 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஜூன் 19 ஆம் தேதி லட்சுமி தனது வீட்டிற்குள் தலை முடி அறுக்கப்பட்டும், உடலில் 30 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மூலம் கிடைத்த பணத்தில் லட்சுமி பெயரில் நிறைய சொத்துகளை வாங்கி பதிவு செய்திருந்ததாகவும், அதை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டபோது லட்சுமி மறுத்ததால் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். மேலும், சின்ன சீரகாபாடி சமத்துவபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் லட்சுமி நெருங்கிப் பழகி வந்ததை அறிந்ததால் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இந்த கொலையை ரகுவும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கொலையாளிகளைத் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் ரவுடி ரகு, கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்பு சரணடைந்தார். ரகுவின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ரகமத்துல்லாபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஷேக்மைதீன் (29), சேலம் செவ்வாய்பேட்டை லட்சுமி ஐயர் தெருவைச் சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி (19), மேட்டூர் குஞ்சாண்டியூரைச் சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய மூன்று பேரும் ஜூன் 26 ஆம் தேதி, பவானி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, ரகுவை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரகுவிடம் விசாரித்த பிறகே லட்சுமி கொலையின் முழு பின்னணியும் தெரிய வரும். அதையடுத்து மற்ற கூட்டாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.