Skip to main content

வயிற்று வலிக்காகச் சென்ற பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; ஆண் மருத்துவருக்கு தர்ம அடி

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Female doctor who went for abdominal pain ; hit the male doctor

 

நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாகத் தனியார் மருத்துவமனைக்குச் சென்று பெண் ஒருவருக்குத் தனியார் மருத்துவமனை மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால், தர்ம அடி வாங்கிய சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் வயிற்று வலிக்காக மருத்துவம் பார்க்கச் சென்ற பெண்ணும் மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது.

 

திருப்பத்தூர் போஸ்கோ நகர்ப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான பெண் பல் மருத்துவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நள்ளிரவில் வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு இரவு நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் இல்லை என்ற காரணத்தால் அதே பகுதியில் உள்ள 24 நேரம் செயல்படும் தனியார் அவசர சிகிச்சை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த தியாகராஜன் என்ற மருத்துவர் வயிற்று வலிக்காக வந்த பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பெண் மருத்துவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''செக் பண்ண வேண்டும் படும்மா என்று சொன்னாரு. நான் 'ஏற்கனவே இந்த பிரச்சனை இருக்கிறது. எனக்கு அடிக்கடி இப்படித்தான் வயிற்று வலி ஏற்படும். டேப்லெட் நான் வாங்கி போட்டுக் கொள்வேன் மெடிக்கலில்' என்று சொன்னேன். 'டேப்லெட் இப்போது செட் ஆகவில்லை. அதனால் இன்ஜெக்‌ஷன் போட்டுக்கொண்டு செல்லலாம்' என்று சொன்னேன். 'இன்ஜெக்‌ஷன் மட்டும் போடுங்க. காலையில் நான் ரெகுலராக பார்க்கக்கூடிய டாக்டரை பார்த்துக் கொள்கிறேன்' என்று சொன்னேன். அவர் அதற்கு 'ஒரு டைம் செக் பண்ணி பார்க்கலாம் படு என்று சொல்லிவிட்டார். ஒரு பெண்ணை மருத்துவ சோதனை செய்யும் பொழுது கண்டிப்பாக ஒரு பெண் செவிலியர் இருக்கணும். ஆனால் அங்கு பெண் செவிலியர் யாரும் இல்லை.

 

என்னுடைய சகோதரனையும் வெளியே நிற்கச் சொல்லிவிட்டார். என்னை செக் பண்ணும் பொழுது, பேண்ட்டை கழட்டுங்கள் அப்பொழுதுதான் எங்கு வலிக்கிறது என்று தெரியும் எனச் சொன்னார். நானும் மெடிக்கல் ஃபீல்ட்டில் தான் இருக்கிறேன். வலி இருந்தால் எங்க செக் பண்ண வேண்டும் என எனக்கும் தெரியும். ஆனால் அவர் மிஸ் பிகேவ் பண்ணி எங்கெல்லாம் கை வைக்கக்கூடாதோ அங்கெல்லாம் கை வைத்தார். எனக்கு பிடிக்கவில்லை. ட்ரீட்மெண்ட் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். பின்னர் தனது உறவினர்களுடன் சென்று நியாயம் கேட்ட பொழுது, மருத்துவர் தாக்கியதால் பதிலுக்குத் தாங்களும் தாக்கியதாக'' பெண் மருத்துவர் தெரிவித்தார்.

 

இந்தப் புகாரின் பேரில், திருப்பத்தூர் நகரக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்குப் பின் மருத்துவர் தியாகராஜனை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.