Advertisment

பல உயிர்களை காக்க வேண்டிய பெண் மருத்துவர் பரிதாப பலி! 

Female Doctor passes away in puthukottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி சத்தியா (35),ஒசூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர். நேற்று (17.09.2021) பணி முடிந்து சொந்த ஊருக்கு தனது மாமியாருடன் காரில் சத்தியா வந்துள்ளார். காரை ஓட்டிய மருத்துவர் சத்தியா, சாலை விதிகளை மதித்து சீட் பெல்ட் அணிந்திருந்தார்.

சொந்த ஊருக்குள் நுழையும் முன்பே கனமழை பெய்ததால் துடையூர் ரயில்வே கீழ் பாலத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு ஒரு லாரியே மறையும் அளவிற்கு மழைத் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனைக் கவனிக்காத மருத்துவர் சத்தியா, காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் கார் நின்றுவிட மழைத்தண்ணீர் காருக்குள் புகுந்தது. இடது பக்கமிருந்த மாமியார் வேகமாக கதவை திறந்துகொண்டு கீழே இறங்கிவிட, மருத்துவர் சத்தியாவால் சீட் பெல்ட்டை கழட்ட முடியவில்லை. அதற்குள் தண்ணீர் காருக்குள் நிரம்பிவிட்டது. மாமியார் போராடியும் மீட்க முடியவில்லை. தலைக்கு மேல் தண்ணீர் நிரம்பி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பல உயிர்களைக் காக்க வேண்டிய மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Female Doctor passes away in puthukottai

Advertisment

தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் சத்தியாவின் உடலை மீட்டனர். இந்த நிலையில்தான், இன்று காலை முதல் துடையூர் உள்பட பல கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கீழ்பாலத்தில் மிதமான மழை பெய்தாலே தண்ணீர் தேங்கிவிடுகிறது. இந்த வழியாக 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்றுவருகிறார்கள். இப்படி தண்ணீர் தேங்குவதால் ஒவ்வொரு உயிராகப் பலி கொடுக்க நாங்கள் தயாரில்லை. அதனால் மேம்பாலமாக அமைக்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் பலியான மருத்துவர் சத்தியா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், இரவில் தேங்கும் தண்ணீரைக் காலையில்தான் அகற்ற வருவார்கள் ரயில்வே ஊழியர்கள். அதுவரை இப்படி ஏதேனும் விபத்து நடக்கிறது என்கின்றனர். இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட மக்களுடன் இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

Female Doctor passes away in puthukottai

அதேபோல, அறந்தாங்கி அருகே அரசர்குளம் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பு 100 மீட்டர் தூரத்திற்கு கீழ்பாலம் அமைக்க தொடங்கியபோதே அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அப்போது, மழைத்தண்ணீர் தேங்கினால் மோட்டார் மூலம் அகற்றப்படும் என்றனர். ஆனால் தண்ணீர் தேங்கிக்கொண்டுதான் உள்ளது. தற்போது தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே சொர்ணக்காடு கிராமத்தில் கீழ் பாலம் அமைக்கப்படுகிறது. அதிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க கீழ்பாலத்தைவிட மேம்பாலங்கள் அமைத்தால் தண்ணீரில் மூழ்கிப் பலியாகும் சம்பவங்கள் குறையும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe