
தகுதி போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்கவிடாமல் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமீஹா பர்வீன். செவித்திறன் குறைபாடுள்ள இவர், தடகளப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், “செவித்திறன் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டு போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் இந்திய அளவில் கலந்துகொண்ட 12 பேரில், தகுதிச் சுற்றில் தகுதி பெற்றும் பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்துச் செல்ல விளையாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. இவ்வாறு மறுப்பது முறையற்ற நடவடிக்கையாகும்” என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சமீஹா பர்வின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகுதிச் சுற்றில் தேர்வுபெற்ற வீரர்களில் மனுதாரர் மட்டுமே பெண் என்பதால் போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை நடைபெற உள்ள செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதைப் பதிவுசெய்த நீதிபதி, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான தடகளப் போட்டிகளில் சமீஹா பர்வின் இதுவரை பெற்றுள்ள பதக்க விவரங்களை இன்று (12.08.2021) மாலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், நாளைக்குள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தார்.