கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழ்பாடி ஊரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி செல்வி(30), சின்னத்தம்பி பெங்களூருவில் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் செல்வி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவரது ஊருக்கு அருகில் உள்ள சூளாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் வளர்ந்துவரும் குழந்தை, வளர்ச்சி குறைபாடுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் கருக்கலைப்பு செய்து கொள்வது என முடிவு செய்து அதன் படி தியாகதுருவத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கருக்கலைப்பு செய்ய 8,000 ரூபாய் செலவாகும் எனக் கூறியுள்ளனர். அவ்வளவு பணம் செலவு செய்ய வசதி இல்லாத செல்வி தனது ஊரான கீழ்பாடியில் மெடிக்கல் வைத்துள்ள முத்துக்குமாரி என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது முத்துக்குமாரி மற்றும் அவரது தோழி கவிதா ஆகிய இருவரும் சேர்ந்து செல்விக்கு கருக்கலைப்பு செய்து உள்ளனர். இதனால் செல்விக்கு அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை 7 மணியளவில் செல்வி சுயநினைவை இழந்துள்ளார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி மற்றும் சுகாதாரத் துறையினர் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அவர்கள் விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி முத்துக்குமாரி, கீழ் பாடியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்களுடன் சங்கராபுரம் அருகில் உள்ள தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த கவிதா ஆகிய மூவரும் சேர்ந்து செல்விக்கு கருக்கலைப்பு செய்து அவரது உயிர் பிரிவதற்கு காரணமாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மேற்படி போலி மருத்துவர்கள் மூவரையும் தேடி வருகின்றனர்.