/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2907.jpg)
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனத்தில் ஒருவருடமாக மின்கட்டணம் கட்டாததால் மின் இணைப்பைத்துண்டித்துள்ளனர். நாகப்பட்டினத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே உள்ள பனங்குடி கிராமத்தில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. அதன் கிளை அலுவலகம் நாகூர் பண்டகசாலை தெருவில் அமைந்துள்ளது.
இந்தநிலையில், சி.பி.சி.எல். நிறுவனம் கடந்த ஒரு வருடமாகவே மின் கட்டணம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளது. தொடர்ந்து பலமுறை நாகை மாவட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் அறிவிப்புகள், நோட்டீஸ் கொடுத்தும், அந்த நிறுவனம் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்திருக்கிறது. இந்தச்சூழலில் நாகூர் மின்துறை ஊழியர்கள் சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு போகும் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், "1992ம் ஆண்டு இந்த நிறுவனம் பனங்குடியில் நிறுவினர். சுமார் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆலையை நிறுவினர். ஆயில் சுத்திகரிப்பு நிறுவனம் இங்கு வரும்போது இந்த பகுதியை சின்ன சிங்கப்பூராக மாற்றுவோம் என ஆசைவார்த்தை காட்டி நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கினர். அதோடு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்றனர். ஆனால் எதுவும் நடக்கல பசுமையான எங்கள் பகுதியும், நிலமும் கருவேலம் காடாகவும், பாலைவனமாகவும் மாறிவிட்டது. பத்தடியில் இருந்த தண்ணீர் படுபாதாளத்திற்கு போனததோடு கடல்நீரும் உள்ளே புகுந்து பாழ் படுத்திவிட்டது. இரண்டாம் கட்டமாக சில மாதங்களுக்கு முன்பு ஆலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து சுற்றியுள்ள நிலங்களையும் வாங்க முயற்சித்தனர். ஏற்கனவே நிலத்தை பறிகொடுத்துவிட்டு நிலமற்ற அகதிகளாக இருந்த நாங்கள் போராட்டத்தில் இறங்கியதால் சற்று அந்த பனிகளை தள்ளிப்போட்டுள்ளனர். அதற்கென தனியாக அமைக்கப்பட்ட அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளை தற்காலிகமாகப் பூட்டியுள்ளனர். அதனால் மின்கட்டணமும் கட்டாமல் போட்டிருந்தனர்" எனவிரிவாக கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)