
முல்லைப் பெரியாறு பாசன பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி மதுரையில் பிப்ரவரி 22ம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் பேட்டி அறிவித்துள்ளார்.
மதுரையில் வைகை, முல்லைப் பெரியாறு பாசன பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் பேசுகையில்,"முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரளா அரசு இடையூறு செய்து வருகிறது. இடுக்கி அணையில் மின்சாரம் உற்பத்திக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் ரூல் கர்வ் (Rule Curve) முறையில் நீர் திறப்பதை தமிழக விவசாயிகள் ஏற்றுக் கொள்ள முடியாது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள கலாச்சார விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அப்புறப்படுத்த வேண்டும்.முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் படை பாதுகாப்பு வழங்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நிர்வாக பொறுப்பை தமிழக அரசு ஏற்க வேண்டும். வைகை - முல்லைப் பெரியாறு பாசன பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி மதுரையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள்" எனக் கூறினார்.